இன்று எனது பிறந்த நாள்




இன்று எனது பிறந்த நாள். 

பள்ளிக்கூட நாட்களில் பல பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு
. எங்கள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம்.

பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன். பிறந்த நாள் வருவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நினைக்கையில் இன்று சிரிப்பாய் இருக்கிறது.

சிறுவயதில் அப்பா என் பிறந்தநாளன்று சந்தையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்கள், அடுத்த நாள் பள்ளியில் கொடுப்பதற்கு வாங்கிவந்த சாக்லேட்டுகள், அதன் சுவை, நிறம், மணம் என எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றன.

பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கு தனி மரியாதை தான். அவனை தவிர இனாமாக சாக்லேட் வேறு யார் தருவார்கள். பிறந்தநாளன்று சாக்லேட்டுக்காக என்னை சுற்றி சுற்றி வந்த நண்பர்கள், அவர்கள் பிறந்தநாள் அன்று நான் சுற்றி சுற்றி சென்ற நண்பர்கள், பிறந்த நாள் சாக்லேட் தராததால் பென்சிலால் முழங்காலில் குத்திய சக்திவேல், அப்போ அப்போ வீட்டில் மிட்டாய் வாங்க கொடுக்கும் 25 பைசா , 50 பைசாவை ரெண்டு மாசமா சேத்து வச்சு மூணாவது படிக்கும் போதே ஜாமேண்டரி பாக்ஸ் வாங்கி எனக்கு பரிசளித்த என் பால்ய தோழி ஷோபனா என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
அன்று இருந்த பரபரப்பு புத்தாடை, இனிப்புகள் மீதான காதல் இன்றில்லை.

கல்லூரி காலங்களில் கொண்டாடிய பிறந்தநாட்கள், வாழ்த்திய ஆசிரியர்கள், நண்பர்கள், வாழ்த்து அட்டைகள், கச்சேரிகள் , நீண்ட தூர வாகன பயணங்கள், 12 மணி அழைப்புகள், நடுநிசியில் போர்வைக்குள் மறைந்து கொண்டு மெல்லிசான குரலில் அலைபேசியில் வாழ்த்துக்கள் சொன்ன நண்பிகள், 11:45 இல் இருந்து தொடர்பு கொண்டும் 12:30 கே தொடர்பு இணைக்கப்பட்ட நிலையில், இவ்ளோ நேரம் எவ எவகூட டா பேசிகிட்டு இருந்தனு பிறந்ததினமன்றும் உரிமை சண்டை போட்ட என் அன்பு தங்கை மஹி என அனைவரையும் இதழோரம் சிறு புன்னைகையுடன் நினைத்துக்கொள்கிறேன்.

அலுவலகம் வந்த பின்பு கொண்டாடிய பிறந்ததினங்கள், வெட்டிய கேக்குகள், நீண்ட இரவுக்கச்சேரிகள், காதலியின் பிறந்தநாளுக்கு என்னிடம் கவிதை வாங்கி சென்ற நண்பர்கள், நாயரே! மாப்ளைக்கு இன்னைக்கு பிறந்த நாளு ஸ்பெஷலா ஒரு சாயா போடு என்றதற்காக ஸ்பெஷல் சாயா போட்டுக்கொடுத்த பாலவாக்கம் டீக்கடை நாயர் என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

ஒரு மனிதனின் வாழ்வில் ஒரே ஒரு முறை தான் ”பிறந்த‍நாள்” கொண்டாடப்படுகிறது, அதுவும் அவனோ(ளோ) அந்த நாளை கொண்டாடுவதே இல்லை அவர்களுக்காக மற்றவர்கள் தான் அந்த நாளை கொண்டாடுகின்றனர். அதற்கு பின்வரும் பிறந்த நாட்கள்., பிறந்தநாட்கள் அல்ல, அதன் சாயல் கொண்ட வேறு ஒன்றை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையும் கொஞ்சமாய் உறைக்கத்தொடங்கியுள்ளது

என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள், குடும்பத்தினர், இச்சிறியோனையும் தங்கள் நட்பு வலையில் இணைத்துக்கொண்ட பல மாமனிதர்கள், மற்றும் யாவருக்கும் இந்த நிமிடத்தில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் அழியாத அன்பு தான் என்னை இயக்குகிறது.

பகிர்தலும், அன்பும், காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அப்படிப்பட்ட அழகான தருணங்களை வாழ்க்கையில் கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உலகெங்கும் இதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் முகம் அறியாத மனிதர்கள், ஆதரவற்றோர், அனாதைகள், வயது முதிர்ந்த காலத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், தூக்கி எறியப்பட்ட பூனைக்குட்டிகள், என அத்தனை பேர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.,

எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும் விரும்புகிறேன் 

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets