பிரிய தங்கைக்கு...



எப்படி இருக்கிறாய்
என் பிரிய தங்கையே... ?

கலைந்து போன மேகங்கள்
எல்லாம் கூடி
என் மனதிற்குள் மழை...

இன்றும் நினைவுபடுத்த முடிவதில்லை,
உன்னைச் சந்திக்கும் முன்
நான் சந்தித்திருந்த சராசரி நாட்களை...

தேடிவந்த உறவானது  தங்கை...

மோதலில் நிகழவில்லை 
நம் முதல் சந்திப்பு...
என்றாலும் 
மோதலுக்கு பஞ்சமில்லா நாட்கள்...
இன்னொரு முறை
நிச்சயமாய் சந்திக்க விருப்பமில்லை,
நிச்சயித்து இருக்கிறது  இருவர் மனதும்.

நாமொன்று நினைக்க,
அவனோன்றோ நினைத்திருந்தான்.
அதை ஊகிக்க  தவறியது நம் குற்றம்தானோ ?

கரம்பற்றி குலுக்கினேன் நானும்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

ஒருநாள் வழிதவறி
என் வலைப்பக்கம் வந்த நீ,
எனக்கே புரியாமல் செய்திருந்த கிறுக்கல்களை
அழகாக்கித் திரும்பத் தந்தாய்
கவிதை என்று...

அந்த அழகான தருணத்தை
கவிதையாக வடித்திட,
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்
வார்த்தைகளை...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

என் கவிதைகளுக்கும்
ஒரு வாசகி கிடைத்தாய்,
நீ வாசிக்கவே எழுதத்துவங்கினேன்
நானும்...

கைப்பேசி பல கதைகள் எழுதும்,
கவிதையும் கிறுக்கும்,
நம்மைப்பற்றி... 

மன்னிப்பிற்கும் நன்றிக்கும்  
மரண தண்டனைவிதித்தேன்  
மகிழ்ச்சியாக..

மன்னிப்பா? நன்றியா?
அதெந்த மொழி
மறந்து போனேனே நானும்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

முக்கிய நாட்களில் பரிசளிப்பது போய்,
பரிசளிக்கும் நாட்கள்
முக்கிய நாட்களானது...

ஒருநாள் நான் தோற்றுப்போய்
துவண்டிருந்த பொழுது
அழுவது ஆண் பிள்ளைக்கு
அழகா அண்ணா என்றாய் ?

வருகிறதே என்ன செய்ய என்றேன் ??

சரி இனியொருமுறை
கண்கள் கலங்கினால் என்னிடம் சொல்
உனக்காக அழக் காத்திருக்கும்
என்னிரு  கண்கள் என்றாய்.,

அழுகை உறைந்து போய்
அதிசயித்து இருந்தேன்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

எனது வெற்றிகள் அனைத்தும்
எனக்கு முன்னே
உன்னிடம் வந்து கவிதைகள் பாடி
புன்னகைப் பரிசில்கள்
பெறத் துவங்கின...

எனக்குக் கிடைக்காதென்று
மறந்ததை எல்லாம்
கண்முன்னே காட்டி நிறுத்தினாய்.,

என்ன செய்யப்போகிறேன்
இத்தனைக்கும் கைம்மாறு நானுனக்கு
கேட்டதற்கு,
உன் அன்பு  போதுமென்றாய்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

கனவு போலத்தான் இருக்கிறது
நீ என்னைக் கடந்துபோனது...

உன் நலத்தில் என் நலம் 
கண்டது தவறா ?

நான் கண்ட நலனை
உரக்க கூறியது தவறா ?

சரி எனப்பட்டதை
தவறேதும்  கருதாது
எடுத்துரைத்தது தவறா??

தாயிடம் முத்தம் வாங்கும்
தம்பியை  பார்த்து பொறாமைப்படும்
குழந்தையின் மனநிலையில் நான்
உனக்கிது  புரியாமல் போனது
என் துயரமே...

பின்னொருநாளில்
பேசவந்த என்னிடம்,
பார்வை கூடப் படரவிடாமல் சென்றாயே.,
நிஜமாகவே அழவில்லை அன்று
வாங்கிக்கொள்ள உன் கண்கள்
உடனில்லை என்பதால்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே - அன்றும்
நீ அங்கிருந்தாய்...

சத்தியமாக
சில நாட்கள் தான்
பேசவில்லை உன்னுடன் கோபத்தால்
இதர நாட்களை இழந்தது,
என் தயக்கத்தில் தான்...

ஒவ்வொரு நொடியும்
வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கிறேன்
நிச்சயமாய் நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்..,

எல்லாம் நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே,
தூங்கச்செல்கிறேன் தினமும்
எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறதோ
என் முட்டாள் மனது...

எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைந்து போகவே
செய்கிறது சில நாட்களில்
நான் தொலைத்ததைக் கனவினில் கண்டு...

பிரிவுகளின் வலி சுகமானதுதான்
உணர்ந்திருக்கிறேன் சிலமுறை
ஆனால் ஏனோ இம்முறை மட்டும்
என் இடப்பக்கம் முழுவதும்
மெல்லிய வலி பரவுவதை உணர்கிறேன்
நிரந்தரமாய்...

நினைவுகள்
அழகானவைகள்,
சுகமானவைகள்,
இன்பம் தருபவைகள்.,
நம்பப்படுகிறது என்றாலும்
என் காதோரம் மட்டும்
கீறி மறைகிறதோர் அசீரரி
இவை ஏதும் உனக்கில்லை என்று
வேண்டுமென்றால் வைத்துக்கொள் கண்ணீரை
பரிசளித்துவேறு செல்கிறது கண்களுக்கு...

இடம் பொருள் ஏவல்
ஏதும் தெரிவதில்லை
என் கண்களுக்கு
கண்ணீர்
ஐயோ அதைவிட மோசம்...

வலிக்கான சரியான
வரிவடிவம் வார்த்தைகளில்
வருவிக்க முடிவதில்லை
வழங்கிவிட்டுச் சென்ற
உன்னாலும் கூட...

உன் பிறந்தநாளன்று
நான் எழுதிய வாழ்த்துக்களை 
இன்று கேட்கக்கூட முடிவதில்லை...
அப்படி அனுபவித்து எழுத 
முயல்வதில்லை நானும்.,
முயன்றாலும் முடிவதில்லை என்னாலும்...

வழி தவறி பத்திரமாய்
நம்மிடம் வந்து சேர்ந்த பட்டாம்பூச்சிகளும்,
நம் நினைவுகள் பொறித்துக் கொண்ட
இடங்களும் மறக்கமுடிவதில்லை.,
மறக்கமுயல்வதில்லை நானும்...

எதையும் அழிக்க எண்ணமில்லை
என் நெஞ்சில் எவ்வளவு
வலி கண்டபோதிலும்...

எனக்கான அடையாளங்களை
எப்படி முடியும்
நானே கலைத்துப்போட...

சத்தமில்லாமல் வந்து
சலனம் தந்தாய்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடந்தும் சென்று விட்டாய்,
நீ வந்து போனதன் அடையாளமாய்
நான் மட்டும் நின்றுகொண்டிருக்கிறேன்.,
இன்னமும் இங்கேயே...

நம்முடன் ஒன்றாகப்
பயணித்த பாதச் சுவடுகள்
ஒன்றாகத் தான் இருக்கின்றன இன்னமும்
நாம் பாதை மாறிச் சென்றபின்னும்
அவைகளை மீண்டும் சந்திக்கும் பொழுது
என்ன பதில் சொல்வேன்
உன்னை விட்டு விட்டு
நான் மட்டும் தனித்து வந்ததன்
காரணமாக...

உடன் இருக்கும் வரை
ஒன்றுமே தோன்றவில்லை.,
எங்கே சென்றுவிடப் போகிறாய்
என்ற திமிர்கலந்த தைரியம்
உடன் இருந்தது...

ஆனால் ஒருநாள்
நீ சொல்லாமலேயே
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதென்பதை
அறிகிறேன்...

சில நாட்களில்
கோபம் கூடக் கரைந்துபோகுமே
எனில் என் மேல்
நீ கொண்டிருப்பது,
உன் மேல்
நான் கொண்டிருப்பது,
கோபத்தை விடக் கொடியதா??
எதுவாயினும்
காத்திருக்க நான் தயார்
ஆனால் இழந்த காலம் ???

இனி ஒருவேளை
நாம் சந்திக்க நேர்ந்தால்
சிறு புன்னகையாவது தருவாயா ?
சின்ன கண்சிமிட்டல் ?
இல்லை கண்டுகொள்ளாமலேயே
போய்விடுவாயா என்ற கலக்கம் தான்
இன்றெனக்கு...

நான் கவிதை எழுதத் துவங்கிய காரணம்
வேறொன்றாக இருக்கலாம்
ஆனால்
நான் கவிஞன் என்று
எனக்கே கர்வம் தந்தவள்
நீ தான்...

இன்றும் கூட எழுதுகிறேன் நிறைய
என்றாவது நீ
படிப்பாய் என் நம்பியே...

உனக்காக நான் நிர்ணயித்த
பட்டாம்பூச்சிகள் உலகம்
பட்டுபோய்கிடக்கிறது இன்று
புன்னகை தொலைத்த எனக்கும்
பாதை திறக்க மறுக்கிறது...

உனக்குப் பிடித்த பாடல் என
என்னைக் கேட்கச்சொல்லி
நீ கேட்ட பொழுது
கேட்காமல் அலட்சியப்படுத்திய நான்
இன்று திரும்பத் திரும்பக் கேட்கிறேன்
உனக்குக் கேட்காத தூரத்தில்
இருந்து கொண்டு
இன்னமும் அந்தப் பாடல்
எனக்குப் பிடிக்காது எனினும்...

தெரியுமா உனக்கு
உன் பிறந்த நாள் அன்று
நான் அணிந்த சட்டையைத் தான் 
விரும்பி அணிகிறேன் வீட்டினில் இன்னமும்
அது சிறிதாகப் போய் விட்டிருப்பினும்...

எவ்வளவு அவசரமாகப்
போய் கொண்டிருந்தாலும்
யாரேனும் உன் பெயர் சொல்லி அழைத்தால்
ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்கிறேன்
ஏமாறப்போவது தெரிந்தும்...

நினைவுகள் வரங்கள்
நினைவுகள் வலிகள்
இரண்டுக்கும் மத்தியில் நான்
எதைக் காட்டுவது என்று தெரியாமல்
கைகளைக் கட்டிக்கொண்டு
வடுக்களோடு...

எல்லாம் தான் இருக்கிறது.,
எல்லாரும் தான் இருக்கிறார்கள்.,
வைரங்களை வைத்துக்கொண்டு,
என்ன செய்யபோகிறது வண்ணத்துப்பூச்சி..?
வண்ணங்களை நீ எடுத்துச் சென்று விட்ட பிறகு...

எழுதிய கவிதைகள் அழிந்து போகலாம்,
பேசிய வார்த்தைகள் கரைந்து போகலாம்,
பழகிய நாட்கள் இறந்து போகலாம்,
பாசம் ??

கனவு போலத்தான் இருக்கிறது
நீ என்னைக் கடந்து போனது...

போனால் போ
போதும் இந்த விளையாட்டு
முடித்துக்கொள்கிறேன்
என மறக்க நினைக்கிற
ஒவ்வொருமுறையும்
நூறு முறை அதிகமாக
மறுத்து நிற்கிறது என் மனது...

அந்த அழகான நாட்களும்
உன் நினைவுகளும்,
நம் வசந்தகால  கதைகளும்,
மீண்டும் மீண்டும் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்...
இது போன்ற மாலை நேரமும்,
மழைக்கால நாட்களும்,
வந்து போகின்ற வரையினில் ...

மழை நின்றுவிட்டிருந்தது
தூறல் மட்டும்
நிற்கமறுக்கிறது  என்னுள்...


கடைசியாய் ஒருநாள்


கடைசி தேர்வெழுதிய நாள் ...
கல்லூரி வாழ்வின் கடைசி நாள் ...



                    அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும்...

                   அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

                   எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும்... சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை...

                   எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி...

                  இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து, எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல...

                 அதே குழந்தை மனம்.. எல்லோர்  முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு.. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை.. அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை.. அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு..  வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை.. இத்தனை நாட்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட உறவு இப்படியே இன்றோடு போய்விடுமா?.. பல கேள்விகளுக்கு மத்தியில் பலமாய் இந்த ஒரே கேள்வி...

               வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன. மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம்...

                அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென...

                என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன என் ஓர் உறவு, ஒரே உறவு, தவிர்க்க முடியாத காரணத்தால் தவிர்க்கப்பட்ட உறவு.. இத்தனை நாளாய் தவிர்த்த அவள் முகத்தை மட்டுமே ஓடி  தேடி சென்று பார்த்தேன் அன்று முழுவதும். என்ன ஒரு பாக்கியம் பெற்றேன் நான்., என் எல்லா சுக துக்கங்களிலும் என் பின்னால் இருந்தவளை பின்னால் இருந்து பார்க்கும்படியான அந்த இருக்கை அமைப்பு.. அதுவும் அந்த கடைசி நாளில் , விடைத்தாளின் அந்த ஏழாம் பக்கத்தில் என் விழி சிந்திய துளி நிச்சயம் அவளுக்காகத்தான் இருந்திருக்க கூடும்...

               தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு மாதம்  என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறை விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும், முதல் வகுப்பென என எண்ண வைக்கின்றது...

                அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும்…

குடியரசு தினமாம்...










தூக்கம் தொலைத்த ஓர் இரவில்... 
கருப்பு பயணம் என் கண்ணுக்குள்,
ஏதோவொரு பாதை தெரிய
நடந்தேன் அதன் போக்கில்...

என் பயணம்
என் தேசத்தை சுற்றியது,
ஒவ்வொரு மாநிலமாய்...
ஒவ்வொரு ஊராய்...

எத்தனை வேற்றுமை ?
என் பாரத நாட்டில்!
என் செங்குருதி பீரிட்டு
சிவப்பு வண்ணம் தெளித்தது,

அதனை ஒரு தூரிகையால் தொட்டு
ஒரு சன்னலை வரைந்தேன்...
வரைந்த சன்னலின் வழியே
என் தேசத்தை கண்டேன்...

இல்லாத பிள்ளைக்காக
செல்வம் சேர்க்கும் குடும்பம்!
இருக்கும் தாய் நோய்க்குமருந்தின்றி
தவிக்கும் குடும்பம்!

இத்தனை நிறங்களா மனிதர்களிலென
பாரதியின் கேள்வி கேட்டது!
வேற்றுமைக்கும்
வேற்றுமை காண்கிறது எந்நாடு...

உன் ஓட்டுரிமை கொடு.,
நான் நாட்டுரிமை பெற்று....
உன் வீட்டையாள்கிறேன்.,
என்கின்றன அரசியல் கட்சிகள்.

சட்டையின்றி திரியும்
எனிந்திய குழந்தைக்கு
கொடியும் குண்டூசியும்
தருகிறான் அரசியல்வாதி.

மக்கள் சுதந்திரமெல்லாம்
சுதந்திரமாய் போயிற்று
சுதந்திரம் என்ன விலை?
கேட்கிறான் இந்தியன்.

விழியில் வழியும்
கண்ணீர் காய்ந்து
விடுதலை விடியல்
எப்போது கிடைக்கும் என் இந்திய தாயே ?

வருடத்திற்கொருமுறை 
தவறாமல் வந்துவிடுகின்றன, 
சுதந்திரதினமும் 
குடியரசுதினமும் .

பரிமாறப்படும் வாழ்த்துக்களுக்கோ,  
பஞ்சமே இல்லை ...
நானும் கையாலாகாத இந்தியனே.,
என் வாழ்த்தினையும் பதிவு செய்கிறேன்., 

வேறென்ன கிழிக்க முடியும் என்னால் மட்டும் ....

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets