கடைசியாய் ஒருநாள்


கடைசி தேர்வெழுதிய நாள் ...
கல்லூரி வாழ்வின் கடைசி நாள் ...



                    அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும்...

                   அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

                   எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும்... சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை...

                   எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி...

                  இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து, எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல...

                 அதே குழந்தை மனம்.. எல்லோர்  முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு.. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை.. அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை.. அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு..  வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை.. இத்தனை நாட்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட உறவு இப்படியே இன்றோடு போய்விடுமா?.. பல கேள்விகளுக்கு மத்தியில் பலமாய் இந்த ஒரே கேள்வி...

               வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன. மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம்...

                அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென...

                என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன என் ஓர் உறவு, ஒரே உறவு, தவிர்க்க முடியாத காரணத்தால் தவிர்க்கப்பட்ட உறவு.. இத்தனை நாளாய் தவிர்த்த அவள் முகத்தை மட்டுமே ஓடி  தேடி சென்று பார்த்தேன் அன்று முழுவதும். என்ன ஒரு பாக்கியம் பெற்றேன் நான்., என் எல்லா சுக துக்கங்களிலும் என் பின்னால் இருந்தவளை பின்னால் இருந்து பார்க்கும்படியான அந்த இருக்கை அமைப்பு.. அதுவும் அந்த கடைசி நாளில் , விடைத்தாளின் அந்த ஏழாம் பக்கத்தில் என் விழி சிந்திய துளி நிச்சயம் அவளுக்காகத்தான் இருந்திருக்க கூடும்...

               தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு மாதம்  என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறை விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும், முதல் வகுப்பென என எண்ண வைக்கின்றது...

                அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும்…

0 comments:

Post a Comment

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets