இன்று எனது பிறந்த நாள்




இன்று எனது பிறந்த நாள். 

பள்ளிக்கூட நாட்களில் பல பிறந்தநாட்களை வீட்டில் இருந்து கொண்டாடி உள்ளேன். காலை எழுந்ததும் அம்மாவின் முத்தமும் அவள் செய்யும் வடையும் பாயாசத்திற்குமாகவே பிறந்தநாட்கள் அடிக்கடி வராதா என காத்திருந்த நாட்கள் நிறைய உண்டு
. எங்கள் பள்ளியில் பிறந்தநாளன்று யூனிபார்ம்களுக்கு விடை கொடுத்துவிட்டு புத்தாடைகள் அணிந்துகொள்ளலாம்.

பிறந்த நாட்களில் கூட வறுமை காரணமாக புத்தாடை அணியாமல் வந்த பால்ய நண்பர்களை விளிம்பு நிலையில் இருந்து நினைத்துப்பார்க்கிறேன். பிறந்த நாள் வருவதற்கு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நாட்களை எண்ணிக்கொண்டிருந்ததை நினைக்கையில் இன்று சிரிப்பாய் இருக்கிறது.

சிறுவயதில் அப்பா என் பிறந்தநாளன்று சந்தையில் இருந்து வாங்கி வந்த பலகாரங்கள், அடுத்த நாள் பள்ளியில் கொடுப்பதற்கு வாங்கிவந்த சாக்லேட்டுகள், அதன் சுவை, நிறம், மணம் என எல்லாமே இன்னும் நினைவில் இருக்கின்றன.

பள்ளியில் பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கு தனி மரியாதை தான். அவனை தவிர இனாமாக சாக்லேட் வேறு யார் தருவார்கள். பிறந்தநாளன்று சாக்லேட்டுக்காக என்னை சுற்றி சுற்றி வந்த நண்பர்கள், அவர்கள் பிறந்தநாள் அன்று நான் சுற்றி சுற்றி சென்ற நண்பர்கள், பிறந்த நாள் சாக்லேட் தராததால் பென்சிலால் முழங்காலில் குத்திய சக்திவேல், அப்போ அப்போ வீட்டில் மிட்டாய் வாங்க கொடுக்கும் 25 பைசா , 50 பைசாவை ரெண்டு மாசமா சேத்து வச்சு மூணாவது படிக்கும் போதே ஜாமேண்டரி பாக்ஸ் வாங்கி எனக்கு பரிசளித்த என் பால்ய தோழி ஷோபனா என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.
அன்று இருந்த பரபரப்பு புத்தாடை, இனிப்புகள் மீதான காதல் இன்றில்லை.

கல்லூரி காலங்களில் கொண்டாடிய பிறந்தநாட்கள், வாழ்த்திய ஆசிரியர்கள், நண்பர்கள், வாழ்த்து அட்டைகள், கச்சேரிகள் , நீண்ட தூர வாகன பயணங்கள், 12 மணி அழைப்புகள், நடுநிசியில் போர்வைக்குள் மறைந்து கொண்டு மெல்லிசான குரலில் அலைபேசியில் வாழ்த்துக்கள் சொன்ன நண்பிகள், 11:45 இல் இருந்து தொடர்பு கொண்டும் 12:30 கே தொடர்பு இணைக்கப்பட்ட நிலையில், இவ்ளோ நேரம் எவ எவகூட டா பேசிகிட்டு இருந்தனு பிறந்ததினமன்றும் உரிமை சண்டை போட்ட என் அன்பு தங்கை மஹி என அனைவரையும் இதழோரம் சிறு புன்னைகையுடன் நினைத்துக்கொள்கிறேன்.

அலுவலகம் வந்த பின்பு கொண்டாடிய பிறந்ததினங்கள், வெட்டிய கேக்குகள், நீண்ட இரவுக்கச்சேரிகள், காதலியின் பிறந்தநாளுக்கு என்னிடம் கவிதை வாங்கி சென்ற நண்பர்கள், நாயரே! மாப்ளைக்கு இன்னைக்கு பிறந்த நாளு ஸ்பெஷலா ஒரு சாயா போடு என்றதற்காக ஸ்பெஷல் சாயா போட்டுக்கொடுத்த பாலவாக்கம் டீக்கடை நாயர் என அனைவரையும் மகிழ்ச்சியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

ஒரு மனிதனின் வாழ்வில் ஒரே ஒரு முறை தான் ”பிறந்த‍நாள்” கொண்டாடப்படுகிறது, அதுவும் அவனோ(ளோ) அந்த நாளை கொண்டாடுவதே இல்லை அவர்களுக்காக மற்றவர்கள் தான் அந்த நாளை கொண்டாடுகின்றனர். அதற்கு பின்வரும் பிறந்த நாட்கள்., பிறந்தநாட்கள் அல்ல, அதன் சாயல் கொண்ட வேறு ஒன்றை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையும் கொஞ்சமாய் உறைக்கத்தொடங்கியுள்ளது

என் மீது அன்பும் அக்கறையும் கொண்ட நண்பர்கள், குடும்பத்தினர், இச்சிறியோனையும் தங்கள் நட்பு வலையில் இணைத்துக்கொண்ட பல மாமனிதர்கள், மற்றும் யாவருக்கும் இந்த நிமிடத்தில் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். உங்களின் அழியாத அன்பு தான் என்னை இயக்குகிறது.

பகிர்தலும், அன்பும், காதலும் வாழ்க்கையை அழகாக்குகின்றன. அப்படிப்பட்ட அழகான தருணங்களை வாழ்க்கையில் கொடுத்த, கொடுத்துக்கொண்டிருக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கு என் நிறைந்த நேசத்தையும் நன்றியையும் பகிர்ந்து கொள்கிறேன்.

உலகெங்கும் இதே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் முகம் அறியாத மனிதர்கள், ஆதரவற்றோர், அனாதைகள், வயது முதிர்ந்த காலத்தில் குழந்தைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், விளிம்பு நிலை மனிதர்கள், தூக்கி எறியப்பட்ட பூனைக்குட்டிகள், என அத்தனை பேர்களுக்கும் வாழ்த்து சொல்ல விரும்புகிறேன்.,

எனக்கு நானே வாழ்த்து சொல்லிக் கொள்ளவும் விரும்புகிறேன் 

பாதையில்லா வழி பயணம்


நகர்ந்து கொண்டிருக்கிறேன்.
முன்னேறி கொண்டிருக்கிறேனா ?
தெரியவில்லை.,
பல வினாக்கள் என்னுள் 
பதில் சொல்லத்தான் எவருமில்லை...

சில நேரம் 
ஓடுவதாய் உணர்கிறேன்.
சில நேரம் நடப்பதாய்.
சில நேரம் பறப்பதாய்.,

பாதை இல்லா வழியில்
ஓர் பயணம்.
வழியில் எவரையும் காண இயலவில்லை... 
முன்னே சென்றவர்கள் 
திரும்பாமல் இருந்திருக்கலாம்,
எவரும் செல்லாமலேயும் இருந்திருக்கலாம்.
 
வெகு தொலைவில் பின்னால் சிலரை காண்கிறேன் 
அவர்களுக்கு நானே முன்னோடி .,
என் பயணக்குறிப்பை அவர்கள்
வெற்றிக்கதையாக படிக்கலாம், 
தோல்விக்கதையாகவும்  கூட.

அவ்வபோது இடறிவிடும் வழிக்கற்களையும் 
முட்புதர்களையும், பெரும் பாறைகளையும்     
போற்றுகிறேன்...
என் பயணத்தை ருசியாக்குபவை 
அவைகள் தான்...
எனக்கு தோல்வி தருபவை.,
என்னை மேலும் மேலும் பலமாக்குபவை.,

முன்னேறி கொண்டிருக்கிறேனா ?
முன்னேறி விட்டேனா ?
தெரியவில்லை.
ஒன்று மட்டும் நிதர்சனம் 
நேற்று நின்ற இடத்தில் 
இன்று நான் இல்லை.

இன்னும் இன்னும் வேண்டுகிறேன்
தோல்விகளை.,
இன்று அதை தாண்டி 
ஜெயிப்பதிலான  சுகம்தனை கண்டபின்.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்





சேலையில் தொட்டில் கட்டி
சாலை வேலை பார்க்கும் அம்மாவுக்கும்..!

காக்கி சட்டை போட்டு
ஆட்டோ ஓட்டும் அம்மணிக்கும்..!

பத்து செங்கல்லை தூக்கும் சித்தாளாய்
வேலை பார்க்கும் பெரியாளுக்கும்..!

நாலு வீடு பத்து பாத்திரம் தேய்த்து
நாலு எழுத்து படிக்க அனுப்பும் தாயம்மாவுக்கும்..!

கல் கணவனிடமும் புல் புருஷனிடமும்
குப்பை கொட்டும் குணவதிகளுக்கும்..!

அந்நியனாய் அயல் தேசம் சென்ற புதல்வனிடம்
கண்ணியமான பாசத்திற்காக ஏங்குபவளுக்கும்..!

உயிரை ஒருவனுக்கு கொடுத்து உடம்பை
மற்றவனுக்கு கொடுத்தவளுக்கும்..!

வறுமையில் தன்னை தொலைத்து கரு அறையில்
சிவப்பில் வாழும் 'அவளு'க்கும்..!

குடும்பத்தை பேண பஸ் பயண
கூட்டத்தில் இடிபடுபவளுக்கும்..!

கணநேரம் விலகாமல்
கணினி இயக்கும் கண்மணிக்கும்..!

காதலிப்பவளுக்கும்
காதலித்து கைவிடப்பட்டவளுக்கும்..!

நேரிலும் நிழலிலும்,
விண்ணிலும் மண்ணிலும்,
என்றும் சுகமளிப்பவளுக்கும்..,

என் சிரம் தாழ்ந்த
மனம் கனிந்த
மகளிர் தின வாழ்த்துக்கள்... :)

பிரிய தங்கைக்கு...



எப்படி இருக்கிறாய்
என் பிரிய தங்கையே... ?

கலைந்து போன மேகங்கள்
எல்லாம் கூடி
என் மனதிற்குள் மழை...

இன்றும் நினைவுபடுத்த முடிவதில்லை,
உன்னைச் சந்திக்கும் முன்
நான் சந்தித்திருந்த சராசரி நாட்களை...

தேடிவந்த உறவானது  தங்கை...

மோதலில் நிகழவில்லை 
நம் முதல் சந்திப்பு...
என்றாலும் 
மோதலுக்கு பஞ்சமில்லா நாட்கள்...
இன்னொரு முறை
நிச்சயமாய் சந்திக்க விருப்பமில்லை,
நிச்சயித்து இருக்கிறது  இருவர் மனதும்.

நாமொன்று நினைக்க,
அவனோன்றோ நினைத்திருந்தான்.
அதை ஊகிக்க  தவறியது நம் குற்றம்தானோ ?

கரம்பற்றி குலுக்கினேன் நானும்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

ஒருநாள் வழிதவறி
என் வலைப்பக்கம் வந்த நீ,
எனக்கே புரியாமல் செய்திருந்த கிறுக்கல்களை
அழகாக்கித் திரும்பத் தந்தாய்
கவிதை என்று...

அந்த அழகான தருணத்தை
கவிதையாக வடித்திட,
இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறேன்
வார்த்தைகளை...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

என் கவிதைகளுக்கும்
ஒரு வாசகி கிடைத்தாய்,
நீ வாசிக்கவே எழுதத்துவங்கினேன்
நானும்...

கைப்பேசி பல கதைகள் எழுதும்,
கவிதையும் கிறுக்கும்,
நம்மைப்பற்றி... 

மன்னிப்பிற்கும் நன்றிக்கும்  
மரண தண்டனைவிதித்தேன்  
மகிழ்ச்சியாக..

மன்னிப்பா? நன்றியா?
அதெந்த மொழி
மறந்து போனேனே நானும்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

முக்கிய நாட்களில் பரிசளிப்பது போய்,
பரிசளிக்கும் நாட்கள்
முக்கிய நாட்களானது...

ஒருநாள் நான் தோற்றுப்போய்
துவண்டிருந்த பொழுது
அழுவது ஆண் பிள்ளைக்கு
அழகா அண்ணா என்றாய் ?

வருகிறதே என்ன செய்ய என்றேன் ??

சரி இனியொருமுறை
கண்கள் கலங்கினால் என்னிடம் சொல்
உனக்காக அழக் காத்திருக்கும்
என்னிரு  கண்கள் என்றாய்.,

அழுகை உறைந்து போய்
அதிசயித்து இருந்தேன்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

எனது வெற்றிகள் அனைத்தும்
எனக்கு முன்னே
உன்னிடம் வந்து கவிதைகள் பாடி
புன்னகைப் பரிசில்கள்
பெறத் துவங்கின...

எனக்குக் கிடைக்காதென்று
மறந்ததை எல்லாம்
கண்முன்னே காட்டி நிறுத்தினாய்.,

என்ன செய்யப்போகிறேன்
இத்தனைக்கும் கைம்மாறு நானுனக்கு
கேட்டதற்கு,
உன் அன்பு  போதுமென்றாய்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே...

கனவு போலத்தான் இருக்கிறது
நீ என்னைக் கடந்துபோனது...

உன் நலத்தில் என் நலம் 
கண்டது தவறா ?

நான் கண்ட நலனை
உரக்க கூறியது தவறா ?

சரி எனப்பட்டதை
தவறேதும்  கருதாது
எடுத்துரைத்தது தவறா??

தாயிடம் முத்தம் வாங்கும்
தம்பியை  பார்த்து பொறாமைப்படும்
குழந்தையின் மனநிலையில் நான்
உனக்கிது  புரியாமல் போனது
என் துயரமே...

பின்னொருநாளில்
பேசவந்த என்னிடம்,
பார்வை கூடப் படரவிடாமல் சென்றாயே.,
நிஜமாகவே அழவில்லை அன்று
வாங்கிக்கொள்ள உன் கண்கள்
உடனில்லை என்பதால்...

அன்றும் அங்கிருந்தாய்
நீ மழையே - அன்றும்
நீ அங்கிருந்தாய்...

சத்தியமாக
சில நாட்கள் தான்
பேசவில்லை உன்னுடன் கோபத்தால்
இதர நாட்களை இழந்தது,
என் தயக்கத்தில் தான்...

ஒவ்வொரு நொடியும்
வாக்குமூலம் அளித்துக் கொண்டிருக்கிறேன்
நிச்சயமாய் நீ கேட்கப் போவதில்லை
என்று தெரிந்தும்..,

எல்லாம் நாளை சரியாகிவிடும்
என்று எண்ணியே,
தூங்கச்செல்கிறேன் தினமும்
எல்லாம் முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறதோ
என் முட்டாள் மனது...

எவ்வளவோ முயன்றும்
தூக்கம் தொலைந்து போகவே
செய்கிறது சில நாட்களில்
நான் தொலைத்ததைக் கனவினில் கண்டு...

பிரிவுகளின் வலி சுகமானதுதான்
உணர்ந்திருக்கிறேன் சிலமுறை
ஆனால் ஏனோ இம்முறை மட்டும்
என் இடப்பக்கம் முழுவதும்
மெல்லிய வலி பரவுவதை உணர்கிறேன்
நிரந்தரமாய்...

நினைவுகள்
அழகானவைகள்,
சுகமானவைகள்,
இன்பம் தருபவைகள்.,
நம்பப்படுகிறது என்றாலும்
என் காதோரம் மட்டும்
கீறி மறைகிறதோர் அசீரரி
இவை ஏதும் உனக்கில்லை என்று
வேண்டுமென்றால் வைத்துக்கொள் கண்ணீரை
பரிசளித்துவேறு செல்கிறது கண்களுக்கு...

இடம் பொருள் ஏவல்
ஏதும் தெரிவதில்லை
என் கண்களுக்கு
கண்ணீர்
ஐயோ அதைவிட மோசம்...

வலிக்கான சரியான
வரிவடிவம் வார்த்தைகளில்
வருவிக்க முடிவதில்லை
வழங்கிவிட்டுச் சென்ற
உன்னாலும் கூட...

உன் பிறந்தநாளன்று
நான் எழுதிய வாழ்த்துக்களை 
இன்று கேட்கக்கூட முடிவதில்லை...
அப்படி அனுபவித்து எழுத 
முயல்வதில்லை நானும்.,
முயன்றாலும் முடிவதில்லை என்னாலும்...

வழி தவறி பத்திரமாய்
நம்மிடம் வந்து சேர்ந்த பட்டாம்பூச்சிகளும்,
நம் நினைவுகள் பொறித்துக் கொண்ட
இடங்களும் மறக்கமுடிவதில்லை.,
மறக்கமுயல்வதில்லை நானும்...

எதையும் அழிக்க எண்ணமில்லை
என் நெஞ்சில் எவ்வளவு
வலி கண்டபோதிலும்...

எனக்கான அடையாளங்களை
எப்படி முடியும்
நானே கலைத்துப்போட...

சத்தமில்லாமல் வந்து
சலனம் தந்தாய்,
கண்ணிமைக்கும் நேரத்தில்
கடந்தும் சென்று விட்டாய்,
நீ வந்து போனதன் அடையாளமாய்
நான் மட்டும் நின்றுகொண்டிருக்கிறேன்.,
இன்னமும் இங்கேயே...

நம்முடன் ஒன்றாகப்
பயணித்த பாதச் சுவடுகள்
ஒன்றாகத் தான் இருக்கின்றன இன்னமும்
நாம் பாதை மாறிச் சென்றபின்னும்
அவைகளை மீண்டும் சந்திக்கும் பொழுது
என்ன பதில் சொல்வேன்
உன்னை விட்டு விட்டு
நான் மட்டும் தனித்து வந்ததன்
காரணமாக...

உடன் இருக்கும் வரை
ஒன்றுமே தோன்றவில்லை.,
எங்கே சென்றுவிடப் போகிறாய்
என்ற திமிர்கலந்த தைரியம்
உடன் இருந்தது...

ஆனால் ஒருநாள்
நீ சொல்லாமலேயே
சென்று விட்ட பிறகுதான்
காலம் கடந்துவிட்டதென்பதை
அறிகிறேன்...

சில நாட்களில்
கோபம் கூடக் கரைந்துபோகுமே
எனில் என் மேல்
நீ கொண்டிருப்பது,
உன் மேல்
நான் கொண்டிருப்பது,
கோபத்தை விடக் கொடியதா??
எதுவாயினும்
காத்திருக்க நான் தயார்
ஆனால் இழந்த காலம் ???

இனி ஒருவேளை
நாம் சந்திக்க நேர்ந்தால்
சிறு புன்னகையாவது தருவாயா ?
சின்ன கண்சிமிட்டல் ?
இல்லை கண்டுகொள்ளாமலேயே
போய்விடுவாயா என்ற கலக்கம் தான்
இன்றெனக்கு...

நான் கவிதை எழுதத் துவங்கிய காரணம்
வேறொன்றாக இருக்கலாம்
ஆனால்
நான் கவிஞன் என்று
எனக்கே கர்வம் தந்தவள்
நீ தான்...

இன்றும் கூட எழுதுகிறேன் நிறைய
என்றாவது நீ
படிப்பாய் என் நம்பியே...

உனக்காக நான் நிர்ணயித்த
பட்டாம்பூச்சிகள் உலகம்
பட்டுபோய்கிடக்கிறது இன்று
புன்னகை தொலைத்த எனக்கும்
பாதை திறக்க மறுக்கிறது...

உனக்குப் பிடித்த பாடல் என
என்னைக் கேட்கச்சொல்லி
நீ கேட்ட பொழுது
கேட்காமல் அலட்சியப்படுத்திய நான்
இன்று திரும்பத் திரும்பக் கேட்கிறேன்
உனக்குக் கேட்காத தூரத்தில்
இருந்து கொண்டு
இன்னமும் அந்தப் பாடல்
எனக்குப் பிடிக்காது எனினும்...

தெரியுமா உனக்கு
உன் பிறந்த நாள் அன்று
நான் அணிந்த சட்டையைத் தான் 
விரும்பி அணிகிறேன் வீட்டினில் இன்னமும்
அது சிறிதாகப் போய் விட்டிருப்பினும்...

எவ்வளவு அவசரமாகப்
போய் கொண்டிருந்தாலும்
யாரேனும் உன் பெயர் சொல்லி அழைத்தால்
ஒரு நிமிடம் நின்று திரும்பிப் பார்க்கிறேன்
ஏமாறப்போவது தெரிந்தும்...

நினைவுகள் வரங்கள்
நினைவுகள் வலிகள்
இரண்டுக்கும் மத்தியில் நான்
எதைக் காட்டுவது என்று தெரியாமல்
கைகளைக் கட்டிக்கொண்டு
வடுக்களோடு...

எல்லாம் தான் இருக்கிறது.,
எல்லாரும் தான் இருக்கிறார்கள்.,
வைரங்களை வைத்துக்கொண்டு,
என்ன செய்யபோகிறது வண்ணத்துப்பூச்சி..?
வண்ணங்களை நீ எடுத்துச் சென்று விட்ட பிறகு...

எழுதிய கவிதைகள் அழிந்து போகலாம்,
பேசிய வார்த்தைகள் கரைந்து போகலாம்,
பழகிய நாட்கள் இறந்து போகலாம்,
பாசம் ??

கனவு போலத்தான் இருக்கிறது
நீ என்னைக் கடந்து போனது...

போனால் போ
போதும் இந்த விளையாட்டு
முடித்துக்கொள்கிறேன்
என மறக்க நினைக்கிற
ஒவ்வொருமுறையும்
நூறு முறை அதிகமாக
மறுத்து நிற்கிறது என் மனது...

அந்த அழகான நாட்களும்
உன் நினைவுகளும்,
நம் வசந்தகால  கதைகளும்,
மீண்டும் மீண்டும் என் நெஞ்சில்
உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்...
இது போன்ற மாலை நேரமும்,
மழைக்கால நாட்களும்,
வந்து போகின்ற வரையினில் ...

மழை நின்றுவிட்டிருந்தது
தூறல் மட்டும்
நிற்கமறுக்கிறது  என்னுள்...


கடைசியாய் ஒருநாள்


கடைசி தேர்வெழுதிய நாள் ...
கல்லூரி வாழ்வின் கடைசி நாள் ...



                    அதன் பின் எவ்வோளவோ காட்சிகள் கண்கள் கண்டிருப்பினும் ,கல்லூரி நினைவுகளில் கண்மூடுகையில் எல்லாம் கண்முன்னே விரிகிறது அந்த நாளின் ஒவ்வொரு நொடிப் பொழுதுகளும்...

                   அதன் பின் எவ்வோளவோ ஒலிகளைக் கேட்டிருப்பினும் , இன்னமும் காதோரமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது , தேர்வறையின் கனத்த மௌனமும் , காகிதங்கள் திருப்பும் சர சரப்பும் , மின் விசிறிகளின் சுழல் சத்தமும் , இதயம் போலவே விட்டு விட்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு குழல் விளக்கின் முணு முணுப்பும் …..

                   எப்பொழுதும் அதிசீக்கிரம் தேர்வறை விட்டு ஓடும் பழக்கம் மறந்து போய் , நடக்க மறந்து போன முடவன் போல இருக்கையில் ஒட்டிக் கொண்டு , அதன் வேகத்தில் மெதுவாக ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரம் நின்று விடக் கூடாதா என்ற வலி மனதெங்கும்... சுவாரசியமாகச் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங்கதையின் கடைசி பக்கக்கங்கள் நெருங்கிவிட்டது என்னும் பர பரப்பை மீறிய வேதனை...

                   எத்தனையோ பேரை பார்த்த நிதானத்தில் , இயல்பாகத் தான் இருந்தது கல்லூரி...

                  இயல்பு மீறி கல்லூரி முதல் நாள் அணிந்த சட்டையை தேடி அணிந்து, எழுதுபகரணங்கள் சகிதம் வந்து , தேர்வு நேரம் முடிந்த பின்னும் எழுந்து போக மனமின்றி , ஒருவர் முகம் ஒருவர் பார்த்து , முதல் நாள் பள்ளி செல்ல அடம் பிடித்து மறுத்த அதே மனம் கடைசி நாள் கல்லூரி விட்டு செல்ல...

                 அதே குழந்தை மனம்.. எல்லோர்  முன்னும் அழ வெட்கமில்லை அதற்கு.. நாற்காலியில் பெயர் கிறுக்குவது அநாகரீகம் என்று படவில்லை.. அடுத்த வெள்ளையடிப்பில் நிச்சயம் மறைந்து போகும் எனத் தெரிந்தும் சுவர்களில் பெயர் கிறுக்க மறக்கவில்லை.. அத்தனை பேரையும் கையெழுத்தில் அடக்கிவிட முயலும் எண்ணம் முட்டாள் தனமில்லை அதற்கு..  வருடுகையில் உயிர் பெற்று நம்மை சுற்றி உலவுவார்கள் என்று அவ்வளவு நம்பிக்கை.. இத்தனை நாட்கள் கண்டு கொள்ளாமல் விடப்பட்ட உறவு இப்படியே இன்றோடு போய்விடுமா?.. பல கேள்விகளுக்கு மத்தியில் பலமாய் இந்த ஒரே கேள்வி...

               வாய் விட்டுக் கதறி அழுத தருணங்கள் நினைத்துப் பார்க்கையில் பின்னொரு நாள் சிரிப்பை வரவழைக்கின்றன. மனம் விட்டு மகிழ்ந்த தருணங்கள் நினைக்கையில் எல்லாம் வரவழைக்கின்றன கண்ணீரை மௌனமாகக் கண்ணோரம்...

                அன்று அணியப்பட்டிருந்த அத்தனை ஆடைகளின் நிறங்களும் எப்பொழுது பார்த்தாலும் பிரதிபலிக்கின்றன எல்லா ஒளிச்சிதறல்களின் போதும் நிற மாலைகளில் .அன்று பேசப் பட்ட அத்தனை வார்த்தைகளும் பத்திரமாயிருக்கின்றன ரசித்து எழுதப்பட்ட காதல் கவிதைகளென...

                என் நினைவில் மறக்க முடியாமல் பதிந்து போன என் ஓர் உறவு, ஒரே உறவு, தவிர்க்க முடியாத காரணத்தால் தவிர்க்கப்பட்ட உறவு.. இத்தனை நாளாய் தவிர்த்த அவள் முகத்தை மட்டுமே ஓடி  தேடி சென்று பார்த்தேன் அன்று முழுவதும். என்ன ஒரு பாக்கியம் பெற்றேன் நான்., என் எல்லா சுக துக்கங்களிலும் என் பின்னால் இருந்தவளை பின்னால் இருந்து பார்க்கும்படியான அந்த இருக்கை அமைப்பு.. அதுவும் அந்த கடைசி நாளில் , விடைத்தாளின் அந்த ஏழாம் பக்கத்தில் என் விழி சிந்திய துளி நிச்சயம் அவளுக்காகத்தான் இருந்திருக்க கூடும்...

               தேதி பார்க்கும் ஒவ்வொருமுறையும் ஓடிவிட்டதா ஒரு மாதம்  என பிரமிக்க வைக்கிறது காலத்தின் வேகம் . இருந்து கூட ஏதோ ஒரு நீண்ட விடுமுறை விட்டு வந்ததாகவும் , அது முடிந்ததும் மீண்டும் கல்லூரி செல்லப் போகிறோம் என்பது போன்ற எண்ணமே அடி மனதில் பாறை கீழ் உறைந்து போன தண்ணீராய் பதிந்து போய் விழிக்கின்ற ஒவ்வொரு காலையும், முதல் வகுப்பென என எண்ண வைக்கின்றது...

                அது சரி எழுதிப் பழகிய முதல் எழுத்தின் கோணலும் ,முதல் கடன் வாங்கிக் கழித்தலின் தவறும் , மிதிவண்டி பழகி வாங்கி வந்த தழும்பும் , பொதுத்தேர்வு முடிவு வெளியான நாளின் முன் இரவும் , முதல் எதிர்பால் அறிமுகத்தின் குறுகுறுப்பும் , சொல்லப் படாத காதலின் கடைசிப் பார்வைகளும் , எல்லாம் சேர்ந்த கல்லூரி நினைவுகளும் யாருக்குத் தான் மறக்கும்…

குடியரசு தினமாம்...










தூக்கம் தொலைத்த ஓர் இரவில்... 
கருப்பு பயணம் என் கண்ணுக்குள்,
ஏதோவொரு பாதை தெரிய
நடந்தேன் அதன் போக்கில்...

என் பயணம்
என் தேசத்தை சுற்றியது,
ஒவ்வொரு மாநிலமாய்...
ஒவ்வொரு ஊராய்...

எத்தனை வேற்றுமை ?
என் பாரத நாட்டில்!
என் செங்குருதி பீரிட்டு
சிவப்பு வண்ணம் தெளித்தது,

அதனை ஒரு தூரிகையால் தொட்டு
ஒரு சன்னலை வரைந்தேன்...
வரைந்த சன்னலின் வழியே
என் தேசத்தை கண்டேன்...

இல்லாத பிள்ளைக்காக
செல்வம் சேர்க்கும் குடும்பம்!
இருக்கும் தாய் நோய்க்குமருந்தின்றி
தவிக்கும் குடும்பம்!

இத்தனை நிறங்களா மனிதர்களிலென
பாரதியின் கேள்வி கேட்டது!
வேற்றுமைக்கும்
வேற்றுமை காண்கிறது எந்நாடு...

உன் ஓட்டுரிமை கொடு.,
நான் நாட்டுரிமை பெற்று....
உன் வீட்டையாள்கிறேன்.,
என்கின்றன அரசியல் கட்சிகள்.

சட்டையின்றி திரியும்
எனிந்திய குழந்தைக்கு
கொடியும் குண்டூசியும்
தருகிறான் அரசியல்வாதி.

மக்கள் சுதந்திரமெல்லாம்
சுதந்திரமாய் போயிற்று
சுதந்திரம் என்ன விலை?
கேட்கிறான் இந்தியன்.

விழியில் வழியும்
கண்ணீர் காய்ந்து
விடுதலை விடியல்
எப்போது கிடைக்கும் என் இந்திய தாயே ?

வருடத்திற்கொருமுறை 
தவறாமல் வந்துவிடுகின்றன, 
சுதந்திரதினமும் 
குடியரசுதினமும் .

பரிமாறப்படும் வாழ்த்துக்களுக்கோ,  
பஞ்சமே இல்லை ...
நானும் கையாலாகாத இந்தியனே.,
என் வாழ்த்தினையும் பதிவு செய்கிறேன்., 

வேறென்ன கிழிக்க முடியும் என்னால் மட்டும் ....

பிரிந்து போன என் உயிரின் பிறந்தநாள் இன்று













வார்த்தைகளற்ற நடுநிசியில் பொத்துக்கொண்டு வரும் அழுகை தொண்டை குழி வரை நிரம்பி வழியும் இந்த பொழுதில் உன்னை நினைக்காமல் எப்படி என்னால் இருக்க முடியும் . உனக்கான எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டு என் உயிரை மட்டும் எடுத்துக்கொண்டு போன என் உயிரானவன் நீ , எப்படி சமதானப்படுதியும் தனிமை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் அழுக வேண்டும் போல உள்ளது இந்த பாவி மனதுக்கு .

பனிரெண்டு மணி தாண்டி அரைத்தூக்கத்தில் வாழ்த்துச் சொல்வதற்கே அகமகிழ்ந்துப் போவாய்;
இப்போதெல்லாம் உன் பிறந்த நாளில் நான் தூங்குவதே இல்லை என்பதை உன்னிடம் எப்படி சொல்வது?

உலகத்தின் நிழல் மறையும்,
முற்றிலும் இருள் கவியும்,
பின்னிரவுகளில் 
விண்மீன்களும் தூங்க சென்ற பின்னே 
மெதுவாய் விழிக்கின்றன  
உன் நினைவுகள்... 

தாகமின்றி உடையாத நீர்குமிழியாய்,
இங்கும் அங்கும் நகர்ந்துகொண்டே இருக்கிறது 
உன் நினைவுகள் ...

அழவும் மனமில்லை,    
என் கண்ணீரில்    
உன் நினைவுகள் 
கரைந்துவிடும்   
என்கிற பயம்...  

மூளைக்குள் உணர்கிறேன் அந்த மயான காட்சிகளை   
துக்கம் சுமந்தவர்கள் அலைந்தபடி இருந்தார்கள்,
அவர்கள் அமர்ந்தவுடன்,
சங்கின் ஒலி இதயத்துக்குள்... 
லப்டப் அடித்து நமத்து போனது.
சவப்பெட்டியை எடுத்து  
என் ஆத்மாவை அடைத்தார்கள்., 
கயறு கட்டி குழிக்குள் இறக்கினார்கள்,
பாவி நானும் ஒரு பிடி மண் போட ,
மள மளவென குழியும் நிரம்ப ...
உறங்கிய உன்னை  
இறந்ததாய் கூறி   
புதைத்த தருவாயில்....
உலகின் ஒட்டுமொத வேதனைகளும் 
ஓரிடம் சேர கண்டேன். 

உன்னை இழந்தேன் என்பதை நான் நம்ப மறுத்தாலும்,
தொடர்ந்து என்னை 
என்னாலலேயே 
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்,
இன்று ஊர்கிதப்படுதி கொள்கிறேன்.

நிறுத்தாத பேசும் 
நிமிடத்திற்கு ஒரு அழைப்புமாய்  
இருந்த நீ 
இன்று இல்லை ...
நீ இருந்து 
நான் இறந்திருந்தால்  
உணர்ந்திருப்பாய் என் வேதனைகளை... 

என் பிரியமான பாவியே 
நிலைக்க தெம்பில்லா 
நெஞ்சம் கொண்ட 
உன்னை மட்டுமா நான் இழந்தேன் 
மென்மையும் உண்மையும் 
குழைத்துக்கட்டிய 
சிம்மாசனத்தில் வீற்றிருந்த 
என்னையுமல்லவா இழந்தேன் ...

நீ 
விட்டுசென்ற 
நினைவுகளின் 
மிச்சங்களில்தான் 
இன்று உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் ....

மறு ஜென்மம் என்று ஒன்று இருந்தால், 
மீண்டும் நண்பனாய் நீ வேண்டும் ...
அப்பவாச்சும் என் கூட கடைசி வரைக்கும் இருப்பியா மாப்ள?

சொல்லிவிட வேண்டும்...


ஒரு நாள் மலைப் பொழுதில்,
கதிரவன் மேற்கே தலை சாய்கையில்,
நிலவொளி புவியின் மேல் பாய்கையில்,
சலனமின்றி மார்பில் சாய்ந்திருந்த
நீ தலை உயர்த்தி கேட்டாய்....

நான் இல்லாவிடில் என்ன செய்திருப்பாய்?

அடி பைத்தியமே
நிலவில்லாத வானா?
இனிப்பில்லாத தேனா?
நீயில்லாமல் நானா?

எதிர் கேள்வி கேட்பதில்தான்
நீ தேர்ந்தவள் ஆயிற்றே
விட்டாயா என்னை ...

அமாவாசை வான் உண்டே என்றாய்...

நிலவில்லாத வான் ஒளி வீசாத போது
நீயில்லாத வாழ்வு ஒளிருமா என்ன?

விரலிறகால் என் காதை இழுத்து
போதும் உன் கற்பனை உவமை
இந்தக் கேள்விக்காவது பதில் சொல்
என்னை விட அழகான அறிவான
பெண்ணை பார்த்திருந்தால்...?

உனக்கு சம்பந்தம் இல்லதவற்றை ஏனடி இழுக்கிறாய்?

செல்லமாய் கோவித்து
பதில் சொல் என்றாய்

சொல்கிறேன் கேள்,

வயிறு நிறைய சாப்பிட்ட பின்
பிடித்த உணவு கூட பிடிக்காது
மனது நிறைய நீ இருக்கையில்
இன்னொருத்தியை மனம் நினைக்காது

ஹைய்யோ... என சிரித்துவிட்டு
உணவு செரிமான பின்
பசிக்குமே என்றாய்

என் செல்லமே,
உணவு செரிக்கலாம்
நினைவு செரிக்குமா?
மனதிற்கு அந்த சக்தி இல்லையடி...

புன்னகையை சிதறிவிட்டு,
சரி நான் உன்னை பிடிக்கவில்லை
என சொல்லி இருந்தால்... ?

தகுந்த காரணம் கேட்டு
தர்ணா செய்திருப்பேன்...!

காரணம் பொருந்தும் பட்சத்தில்..?

தளராமல் முயற்சிக்க நான்
விக்கிரமாதித்தன் இல்லையடி...

அப்போ... நான் வேதளாமா?

வேதாளம் இல்லையடி
காதல் வேதத்தின் ஆழம் நீ...

நிலவில் மின்னல் கீற்றாய்
மீண்டும் உன் சிரிப்பு

நாம் தனிமை தவத்தை கலைப்பதற்காய்
யாரோ கதவு தட்ட...
ஓடிச் சென்று கதவை திறந்தேன்

தினகரன் பேப்பருடன் பேப்பர்காரன்....
அவனுக்கு பின்னால் பால்காரன் ....

எவ்வளவு  நேரமா சார் கதவ தட்றது ?

அடடா...
அத்தனையும் கனவா?

இன்றாவது உன்னிடம்
சொல்லிவிட வேண்டும்
இந்த காதலை...

தீர்மானமாய் தெரிந்த பின்னும்...






அது ஒரு அதிகாலை ...
அதோ அந்த வெட்ட வெளியில் 
கொட்டிக் கிடக்கிறது 
கைப்பிடியளவு சாம்பல்...
சிறிது நேரத்தில் 
அதிலிருந்து உயிர்த்தெழுகிறேன்...! 
பிறகு மேலெழுந்து 
பறக்கத் தொடங்குகிறேன்...
இதோ இன்னும் கொஞ்சம் தூரம் தான் 
என்ற நம்பிக்கையில்... 
எப்படியேனும் தொட்டுவிட வேண்டும் 
இந்தச் சூரியனை... 
மேலே செல்லச் செல்ல 
உடல் முழுதும் சூடாகிறது...! 
இறகுகள் பற்றி எரியத் தொடங்குகின்றன...! 
பறந்து கொண்டே இருக்கிறேன் 
முழுதும் எரிந்ததும் சாம்பலாய் விழுகிறேன்..., 
அந்த வெட்ட வெளியில்... 
பகல் பறவை தன் தேடல் முடிந்து 
அதன் கூடு திரும்புகிறது ..,
இரவின் சிறகு விரியத் தொடங்கி 
அதன் இரவுத் தேடல் ஆரம்பமாகிறது.., 
அந்த இரவின் இருளோடு கைகோர்த்து 
என் சாம்பலுக்குள் ஏதோ 
ரசவாதம் நடக்கிறது ...
அடுத்த காலை 
இதோ மீண்டும் சூரியன் வெளி வருகிறது, 
அதன் புறஊதாக் கதிர்கள் 
ஓஸோன் மண்டலத்தால் புறம் தள்ளப் பட்டு 
கண்ணுக்குத் தெரியாத அகச்சிவப்புக் கதிர்கள் 
எட்டு நிமிடத்தில் என்னை எட்டி விடுகின்றன..., 
ஒளி என் மேல் பட்ட உடன் 
நானொரு பீனிஸ்  பறவையாய் 
உயிர்த்தெழுகிறேன்... 
என் சாம்பலில் இருந்து.., 
பறக்கத் தொடங்குகிறேன் 
சூரியனை இன்று எப்படியாவது 
தொட்டுவிட வேண்டுமென்று 
இது நெடு நாள் நடக்கும் போராட்டம் 
மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறேன்...? 
தீர்மானமாய் 
நீ 
எனக்குக் 
கிடைக்க 
மாட்டாய் 
என்று தெரிந்த பின்னும்....!

தேவ‌தையா நீ ...?





புகையாய்ப் ப‌னி கலந்த 
ஓர் காலைப் பொழுதில்,
தெளிவ‌ற்ற‌ வெளிச்சத்தில், 
தெளிவான தேவ‌தையாய்
வெண்ணிற‌ச் சூடியில்
ப‌ன்னிற‌ துப்ப‌ட்டாவுட‌ன்
தூர‌த்து வான‌வில்லாய் அவள் ...


அருகில் வ‌ர வர 
கருமேகமான கூந்தலும்., 
செம்மதியான அவள் முக‌மும்.,
அசையாத‌ கோவில் தீப‌மாய்
புருவ‌ ம‌த்தியில் தில‌க‌மும்.,
என்னை ஆட்கொள்ள ...


அவள் இன்னும் நெருங்கினாள்.,
  
க‌ருவ‌ண்டுக் கண்களையும் ,
ரோஜா நிற‌க் காது மடல்களையும், 
சிவ‌ந்த‌ உத‌ட்டுக்குள்
வெண்ம‌ணி முத்துக்களையும் , 
தேன் நிற‌ச் தேகத்தையும் ,
தாம‌ரைப்பூ நிற‌க் 
கையுள்ளையும் கண்டு ...


விண்ணுலக தேவதையை 
மண்ணுலகில் கண்ட வியப்பில் 
திகைத்து நின்றேன் ...


தைரியம் வந்தவனாய் 
பாசாங்கு பண்ணிக்கொண்டு 
க‌ண்ணுயர்த்தி வின‌வினேன்... 




தேவ‌தையா நீயென‌.,




க‌ண்தாழ்த்தி
புன்முறுவலில் அவள் சொன்னாள் 




இல்லை உன் காதலி யென..... 





வழிப்பறி





அது ஒரு அழகிய 
மாலை நேரம் ...

வரப்போகும் மழையை 
வரவேற்கும் பொருட்டு, 
மண்ணும் மணம் வீசிகொண்டிருந்த 
மன்மத தருணம் ...

மழைக் காதலன் நானும், 
மழைவேண்டி 
வானம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன், 
பூமியாய்...

மழைக்கு முன்னான மின்னலாய் 
அவளும் வந்தாள்.

மழையை எதிர்நோக்கி, 
மின்னலை கண்ட எனக்குள் 
ஏதேதோ திடீர் மாற்றங்கள்... 

இரண்டு கைகள்...
இரண்டு கால்கள் ...
ஒரே தலை ...
இருந்தபோதும் 
எங்கும் கண்டதில்லை 
இப்படி ஒரு ஈர்க்கும் விழிகளை...! 

பத்து நிமிடம் 
மின்னலை வெறும் கண்களால் 
பார்த்த முதல் ஆள் நிச்சயம் நானாகதான் இருந்திருப்பேன்.

பத்தே நிமிடம் தான்

களவாடி சென்றுவிட்டாள்,
என் இதயத்தை ......

அவளின் அடையாளங்கள் :

சிவந்த மேனி ,
செந்நிற இதழ்கள், 
மஞ்சள்  தாவணி ,
மயக்கும் கண்கள். 

தகவல் தரவேண்டிய முகவரி :

இதயத்தை இழந்தவன், 
143 /111 - காதல் இல்லம், 
கல்லறை தெரு .

நானாகவே தொலைத்துவிட்டேன்

ஜன்னலோர இருக்கை...
பனியோடு சேர்ந்த
அந்த குளிர்காற்று...
பயணம் முழுவதும்
என்னை
உரசிக் கொண்டிருக்கிறது...

என் இருக்கையில் தலை சாய்த்து,
உன்னைப் பற்றி
நினைத்துக் கொண்டிருக்கிறேன்...
எனக்குத் தெரியும்..,
நீ இப்போது
உறங்கி இருப்பாய் என்று...

உறக்கத்தையும் இதயத்தையும்
உன்னிடம்
தொலைத்தவனாய் நான்..

உன்னோடு நான்
வாழப்போகும் அந்த
பசுமையான நாட்களே
என் நினைவை
ஆட்கொண்டிருக்கிறது...

உனக்கு நினைவிருக்கா -
நீ என்னுடன்
இரவில் பேருந்தில்
பயணிக்கவேண்டுமென்று
சொல்லி இருந்தாயே...

இப்போது நான்
உன் நினைவுகளுடன்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்...

என் மனதில்
கவிதை இருக்கின்றது,
எழுதமுடியவில்லை...
என் உயிரில்
காதல் இருக்கின்றது,
சொல்லமுடியவில்லை...

உனக்காக மட்டுமே
வாழப் பழகிவிட்ட
எனக்கு -
எனக்காக வாழ தெரியவில்லை...

நீ ஒன்றும் என் உயிரை
திருடவில்லை...
நானாகவேதான் என் மனதை
தொலைத்துவிட்டேன் உன்னிடம்...


எட்ட முடியாத உன் மீது
ஏக்கங்கள் நிறைந்து இருப்பினும் ,
நான் உன்மீது
கொண்டிருக்கும் காதல்  ஒன்றுதான்.,
என் வாழ்வை
இனிமையாக்கிக் கொண்டிருக்கின்றது..
இன்றளவும் .....

எதற்கடா இந்த வாழ்க்கை !





எதற்கு இந்த வாழ்க்கை!


ஆசைப்பட்டு கேட்ட பொம்மை
கைக்கு கிடைக்காமல்
அதோ பாரு
யாரு வர்றாங்கன்னு
என்று சொல்லி
திசை திருப்பப் படுவதர்க்காகவா ?


பக்கத்து வீட்டு
பையனைப் போல்
துணி வேண்டும் என்று கேட்டதர்ற்கு
அது ஆயி என்று சொல்லி
கவனம் கவரப்படுவதர்க்காகவா ?


மிதிவண்டி இருந்தால் தான்
பள்ளிக்கு செல்வேன் என்று சொல்லி
அடம் பிடித்ததற்காக
மிதி வாங்குவதர்க்காகவா ?


மார்க்கும் போதாமல்
கொடுக்க மாவும் இல்லாமல்
பிடித்த கல்லூரியில் சேரமுடியாமல்
கிடைத்த கல்லூரியில் சேர்வதர்க்கா ?


வகுப்பில் ஆசிரியருக்காக
அமராமல்
அவளுக்காக அமர்ந்து
ஆண்டுகள் கழித்து
அரியர் வைப்பதற்காகவா ?


எதிர்பர்த்து நிற்கையிலே
எதிர்பார்ப்பை நிறைவு
செய்யாதது
ஏமாற்றும் உறவு கண்டு
மனம் புளுங்கவா ?


சுயநல உள்ளங்கள்
சுற்றி இருக்கையிலே
அப்பாவியாய் வாழ்ந்து
பிறர்க்காய் பலவும் செய்து
அவர் கால்களாலேயே மிதிபடுவதர்க்காகவா ?


அல்லது என் நண்பன்
என மார்தட்டி கொண்ட நட்பும்
என்னை புரிந்து கொள்ள மறந்தது
நினத்து
உள்ளம் கருகவா ?


எதற்காக இந்த வாழ்க்கை!

அசைபோட்டு பார்க்கிறேன்

அசைபோட்டு பார்க்கிறேன்
அந்த கால நாட்களை...


என் வாழ்வின்
வசந்த கால நாட்களை....


நட்பா காதலா என
தலைப்பு தெரியாமல்
தலையை பித்துக்கொண்ட நாட்களை....


அவளையே தோழியாகவும்,
அவளையே காதலியாகவும் பாவித்து
கவிதை கிறுக்கிய நாட்களை....


அவள் என்னை பார்க்கிறாளா
என பார்த்தே
என் பொழுதை கழித்த நாட்களை....


இன்று ,நாளை
என நாட்களை நான் கடத்தி கொண்டிருக்க
என்னை கடந்து சென்ற நாட்களை....


நெருங்கி நின்று பார்க்க
பயந்த கோழையாய்
விலகி நின்று அவளை ரசித்த நாட்களை....


அவளை சுற்றி
அவளுக்கே தெரியாமல்
வட்டமடித்த நாட்களை ....


என் இன்பம்
என் துன்பம்
இரண்டையும் தந்தவள் அவள்.


இன்று அசைபோட்டு பார்க்கிறேன்...
அவளது புன்முகம் கண்டு
என்னை பூரிப்படைய செய்த நாட்களை...


அவளது துளி சோகம் கண்டு
என்னை ஆழ்துயரில் ஆழ்த்திய
கருப்பு நாட்களை ....


அவள் வரும் வழி பார்த்து
மணிக்கணக்கில்
காத்துகிடந்த நாட்களை....


அவளது கடைக்கண்
பார்வை வேண்டி
தவம் கிடந்த நாட்களை ....


அவள் பேசிய ஓரிரு வார்த்தைகள்
என்னுள் ஓயாமல்
ஒலித்துக்கொண்டிருந்த நாட்களை....


எனக்குள் எனக்காய் பிறந்த இதயம்
நித்தம் நித்தம்
அவளுக்காய் துடித்த நாட்களை ....


எவ்வளவு யோசித்தும்
பதில் கிடைக்கவில்லை
எனக்குள் தோன்றிய என் காதல்
எனக்குள்ளேயே மறைந்ததன்
மர்மம் தான் என்னவோ ....?

ஒரு நண்பன் தந்த பரிசு

எப்போதும் போல
வெட்டி அரட்டை அடித்து கொண்டிருந்த
அந்த எட்டாவது அவரில்...


திடீரென ஒரு யோசனை
வெட்டியாய் போகும் இந்த நேரத்தில்,
ஒரு கவிதை கிறுக்கினால் என்ன ?


கிழித்தேன் ஒரு பேப்பரை,
நண்பனின் compiler நோட்டில் இருந்து
அவனுக்கே தெரியாமல்...


ஈசானி மூலையில்
இடம்பிடித்து எழுத தொடங்கினேன்.
அது எனக்கு ராசியான இடமும்கூட...


பத்து நிமிட பந்தயத்துக்கு பின்
ஆகா ஓகோ என என் கவிதையை
நானே பாராட்டிகொண்டிருந்த வேலையில்,
அருகிநினில் வந்து நின்றான் நண்பன் ஒருவன்...


வந்தவன் ,
படித்து பார்க்க permission கேட்டான்.
படித்த உடன் கிடைக்கும் பாராட்டு என்றெண்ணி
படிக்க கொடுத்தேன் ஆசையோடு...


படித்து முடித்தவன் கிழித்து எறிந்தான்,
பரிதாபமாய் பார்த்த என் முகத்தில்
காரி உமிழ்ந்தான்...


" தூ இதெல்லாம் ஒரு பொழப்பு "
அவன் சொன்ன இந்த வார்த்தைகளின் echo
இன்னுமும் என் காதுகளில்...


நல்ல வேளை
இத எந்த பொன்னும் பாக்கள.....


அவன் கிழித்து எறிந்த பேப்பரில்
உமிழ்ந்த எசில்லை துடைத்து எறிந்துவிட்டு
மீண்டும் கவிதை எழுத அமர்ந்தேன்
அதே ஈசாணி மூளையில்...




**இதுக்கெல்லாம் feel பண்ணா எப்புடி
இன்னும் எவ்வளவோ இருக்கு...
போங்க boss போங்க boss

என் தோழி




கூச்சம் ஏதுமின்றி நாம்
விரல் கோர்த்து நடந்ததுண்டு...

உனக்காக நானும்,
எனக்காக நீயும்
எத்தனையோ முறை
இறைவனை தொழுததுண்டு...

என்னக்கொரு துன்பமென்றால்
கடல் நீராய் கண்ணீர்
உன் கண்கள் வழி கசிந்ததுண்டு...

என்னை பற்றி எனக்கே
தெரியாத பலவும்
உன் விரல் நுனியில் கண்டதுண்டு...

என் மனதுள் புதைந்த
உணர்வையெல்லாம் நீ
என் கண்கள் வழி படித்து வினவியதுண்டு...

சேர்ந்து சிரிப்பது மட்டுமல்ல
சேர்ந்து அழுவதும் நட்பு தான்
என எனக்குணர்த்திய,

என் தோழியே..!
நீ
ஆணாக மாறிவிடு,
இந்த சாக்கடை
சமுதாயத்தின் சந்தேகப்
பார்வையில் இருந்து
நாம் விடுபடலாம்.

விட்டுட்டு போனவனுக்கு

உன் அன்பின் அடிச் சுவடுகளை
என் உள்ளத்துக்குள் சுமந்தபடி
நீ இல்லாத இவ்வுலகில்
தன்னந் தனியே நான்...

இல்லாத உன் மீது
ஏக்கங்கள் நிறைந்து கொள்ள
தவித்தழுகின்றது என் மனசு...

தந்திகள் அறுந்த வீணையாய்
நாதத்தினை
எப்படி நான் வாசிக்க முடியும்?

உன்னுடைய நினைவுகள்
எப்போதும் என்னை
ஓர் பந்தாய் நினைத்து
உதைத்து விளையாட...

உன் முகத்தை
எப்போதுமே
என் இதயத்தில்
ஓவியமாய் வரைந்த படியே...

நான் தனிமையில் நின்று
நம் நட்பின் வாசத்தை
யோசித்துப் பார்க்கின்றேன்...

நீ இல்லாமல் போனதால்
எப்போதுமே
தனிமைச் சோகமொன்றுக்குள்
நானும் தனியாய் தவித்தே போகின்றேன்...


நீ என்னை விட்டு
போன நாள் முதல்
கீறல்கள், காயங்களால்
இதயச் சோலைக்குள்
நிறையவே இரத்த வடுக்கள்.

உறக்கமற்ற விழிகள்...
உணர்வற்ற உதடுகள்...

இவற்றையெல்லாம்
பிறர்ர்க்கு கூறி
அவர்களையும்
வேதனைக் கடலுக்குள்
மூழ்கடிக்க விருப்பமில்லை.


நேசமற்ற மனங்கள் கொண்ட
மனிதக் கூட்டத்துக்குள்
நானும்
நடைப் பிணமாய் நின்று கொண்டு
என் தோளிலே முகம் சாய்த்து அழுகிறேன்

இன்று சாய்ந்து அழக கூட
வேறு தோள்கள் இல்லை எனக்கு...


இனி நான்
யாரிடம் போய்
என் சோகங்களைச் சொல்லியழ...?

எப்போதும் என் நினைவாய் நீ,
எப்போதாவது உன் கனவில் நான்!

எப்போதும் என் மூச்சாய் நீ,
எப்போதாவது உன் பேச்சில் நான்!,

நானும் வறுமை கோட்டின் கீழ்தான் வாழ்கிறேன்,
உன் அன்பை சம்பாதிக்கத் தினறுவதால் ... !


@------------------------------------------@


ஒரு புன்னகையில்
என்னைக் கவிழ்த்த
கர்வம் உனக்குள்...
கவிழ்ந்ததில்
ஆச்சர்யம்
எனக்குள்...


@-------------------------------------------@



நேரம் போவது தெரியாமல்
உன்னுடன்
பேசி கொண்டிருக்கையில்
ஒரே ஒரு கவலை
எனக்கு,
ஏன் இந்த நேரம்
ஓடி கொண்டிருக்கிறது?…..



@-------------------------------------------@

சமர்ப்பணம்



உன்
உடலை
கூறுபோட்டு
வெளிவந்தேன் நான் .

பிரசவ
மயக்கம் தெளிந்து
என்
முகத்தை பார்த்து
பூரிப்படைந்தாய்
நீ
வலிகளை மறந்து.

வலிகளை
உண்டாக்கிய என்னால்
ஆறுதல் கூட
சொல்ல முடியவில்லை உனக்கு.

என்னால்
முடிந்தது ஒன்றுதான்
என்
முதல் அழுகை
அது
உனக்கே சமர்ப்பணம்.

ஐந்தாம் வகுப்பு நண்பன்






ஆரம்பப் பள்ளியில்
என்னோடு கூடவே இருந்தான்
பட்டன் அறுந்து போன
சட்டையோடு
ஒரு நண்பன்.

ஆசிரியர் மேஜையில்
சாக்பீஸ் திருடினாலும்,
பள்ளித் தோட்டத்தில்
கொய்யா திருடினாலும்
பாதி தர தவறாதவன்.

வீட்டுப் பாடங்களை
எழுத மறந்து போன
நாட்களில் எல்லாம்,
ஆசிரியர் வரக்கூடாதெனும்
என்
பிரார்த்தனையில் தவறாமல்
அவனும் பங்கெடுப்பதுண்டு.

மாங்கா தின்றும்,
கடலை மிட்டாய்
கடித்துச் சிரித்தும்,
புன்னை மரத்தடியில்
புன்னக்காய் பொறுக்கிக்
கோலி விளையாடியும்,
எங்கள்
முதல் ஐந்தாண்டுக் கல்வி
கரைந்தே போயிற்று.

பிரியவே முடியாதென்றும்
உடையவே கூடாதென்றும்
நான்
கங்கணம் கட்டிக் கொண்ட
முதல் நண்பன் அவன்.

பின்,
அந்த மே மாத
வெயில் விடுமுறைக்குப் பின்
நான்
ஆறாம் வகுப்புக்கு சென்றபோது
அவன்
நினைவுகள் மட்டும்
அவ்வப்போது வந்து சென்றன.

அவன் வீட்டுக்கும்
என் வீட்டுக்கும்
சில கிலோமீட்டர் தான்
தூரம்.
அப்போது.

நாங்களோ வெவ்வேறு திசையில்
வெகுதூரம்
நடந்திருந்தோம்.

கடந்து விட்டது
10 ஆண்டு,

இப்போது பார்த்தால்,
"மணி என்னாச்சு " என்று கேட்டு
நகரக் கூடும்.
பரிச்சயமில்லாத
புது முகம் கண்டு.

myfreecopyright.com registered & protected

சுடுவதற்கு தடை

Creative Commons License
சத்யாவின் குட்டி டைரி is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

நான்...

My photo
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நட்போடு சத்யா...

என் ஊக்க மாத்திரைகள்



சிலருக்கு பிடித்திருக்கலாம்! – மகிழ்ச்சி

பலரை இம்சித்திருக்கலாம்! – மன்னிக்க!


திட்டோ?
பாராட்டோ?


9003327433

LSATHYA.CSE@GMAIL.COM

எனக்கு தெரியும்


Template Brought by :

blogger templates

Best Blogger Gadgets